திடீர் திடீரென்று காணாமல் போகும் சான்றுப் பொருட்கள்!!
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பொருளாகவும் அதே நேரம் சான்று பொருளாகவும் காணப்படும் உடைமைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
குறிப்பாக கடந்த மாதம் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவைத் திருடி விற்பனை செய்ய முயன்ற நீதிமன்ற அலுவலர் ஒருவர் சான்று பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதே போன்று கடந்த வருடமும் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவைத் திருடி விற்பனை செய்த குற்றச் சாட்டில் நீதி மன்றத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற சான்று பொருட்கள்
இவ்வாறு இருக்க நபர் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றிலிருந்து விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட 1400 கிலோ கிராம் தங்கூசி வலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட நிலையில் அதில் 1000 கிலோ கிராம் வலை மாயமாகியுள்ளது.
அதே நேரம் கடை ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சான்று பொருளான கஜூ,பிளம்ஸ்கள் கூட நீதிமன்ற கட்டுக்காவலிலிருந்து காணாமல் போய் உள்ளது.
இது தவிர மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாகக் காணப்படும் வாகனங்களின் விலை உயர்ந்த உதிரிப்பாகங்களும் மாயமாகி வருகின்றமை பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கோவிட் கலப்பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவு மஞ்சள் கட்டிகளும் நீதிமன்றத்திலிருந்து காணாமல் போய் உள்ளது.
திருட்டுக்கு தீர்ப்பளிக்கின்ற நீதிமன்றத்திலேயே திருட்டுப் போகும் நிலை மன்னாரில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் சான்று பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மன்னார் நீதிமன்றத்தில் ஒழுங்கான களஞ்சிய சாலை இதுவரை அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)