புத்தரை காணவில்லை! தமிழர் ஒருவர் முறைப்பாடு
வவுனியா-செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புத்தரை காணவில்லை
வவுனியா-செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று (09.04.2023) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த புத்தர் சிலை நேற்று (09.04.2023) மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அதனை வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (10.04.2023) குறித்த பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர், தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து, நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
