உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலமாக ஒரு செய்தியை ஏதோ ஒரு வகையில் தற்போதைய ஆளும் தேசிய மக்கள் அரசாங்கத்துக்கு வடகிழக்கினை சேர்ந்த மக்கள் சொல்லியிருக்கின்றனர். கடந்த காலங்களில் எதிர்க் கட்சியில் இருந்த போது அநுர தரப்பு பல விடயங்களை முன்வைத்து தேசிய அரசியலில் இடம் பிடித்தனர்.
தற்போது ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்து போன நிலையில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது நிறைவேற்றப்படவில்லை.இதனை நன்கு உணர்ந்த மக்கள் அதற்கான பதிலடிகளை கொடுத்துள்ளனர்.
கிழக்கில் முஸ்லிம்கள் பரவலாக வாழும் எந்தவொரு வட்டாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவில்லை.அது போன்று வடக்கிலும் தமிழ் தேசியம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தெளிவூட்டியுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல்
இவ்வாறான நிலை குறித்து திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவிக்கையில் " நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் இந்த நாட்டினுடைய சிறுபான்மை சமூகம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை தலைவர்கள் இந்த நாட்டினுடைய சகல மக்களினதும் அங்கீகாரம் பெற்ற தேசிய மக்கள் சக்தி முதலான கட்சிகளின் தலைவர்களுக்கும் பல உண்மைகளை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் , ஜே.வி.பி உடைய செயலாளர் ரில்வின் சில்வாவும் நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவர்களுடைய அமைச்சர்களும் இந்த தேர்தலை மாபெரும் வெற்றியாக வெளிக்கொணர்கின்ற போதும் கூட நடந்து முடிந்த பொதுத் தேர்தலை விட 20 இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள்.
தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் சொல்லுகின்ற உரிமைகளை கதைக்கின்ற போது இனவாதம், மதவாதம் என்று கூறுவதை விட்டு விட்டு , அதே போன்று வடபுலம் தமிழ் மக்கள் கைகளிலே இல்லை அது தேசிய மக்கள் சக்தியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வோம் என்று சொல்வதை விட அந்த பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சிக்கும் விக்னேஸ்வரன் தலைமையில் இருந்த ஜனநாய முண்ணனிக்கும் கஜேந்திர குமாருடைய இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் அங்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் சிவநேச துறை சந்திரகாந்தன் அவர்களுக்கும் 37 க்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் ஒரு சபையை வழங்கியிருப்பதில் இருந்து ஈபிடிபி கூட அங்கு தீவுப் பகுதியில் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்ற நேரத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்து மாபெரும் சக்தியாக ஒன்றினைவதன் மூலம் தமது பலத்தை நிரூபித்து காட்டலாம். வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றினைவதன் மூலம் இதனை செய்யலாம்.
முஸ்லிம் கட்சி தலைவர்களான அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா ஒன்றினைந்து மாபெரும் சக்தியை வெளிக்காட்டுவதன் மூலம் சரியான பலத்தை காட்டிக் கொள்ள முடியும்.
தலைவர்கள் மாற வேண்டும் அதே போல ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியை தங்கள் கருத்திற் கொண்டு வருகின்ற இரண்டாம் திகதிக்கு முன்னர் இவர்கள் யார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே எனது கருத்தாகும்" என்றார்.இவ்வாறான நிலையில் ஆளும் அரசாங்கம் கடந்த தேர்தலை விட மக்கள் மத்தியில் செல்வாக்குகளை குறிப்பாக வடகிழக்கு மலையகம் போன்ற பகுதிகளில் சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்துள்ளது.
ஆட்சியமைக்க முடியாத நிலை
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பல பகுதிகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை கூட தோன்றியுள்ளது ஏனைய கட்சிகளின் கூட்டுச் சேர்வு மூலமே சபைகளை ஆட்சி செய்ய முடியும்.
இதனடிப்படையில் தேசிய மட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளையும் 3,927 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளையும் 1,767 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர் .இது போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 954,517 வாக்குகளையும் 742 உறுப்பினர்களையும் , ஐக்கிய தேசிய கட்சி 488,406 வாக்குகளையும் 381 உறுப்பினர்களையும், இலங்கை தமிழரசு கட்சி 307,657 வாக்குகளையும் 377 உறுப்பினர்களையும், பொதுஜன முண்ணனி 387,098 வாக்குகளையும் 300 உறுப்பினர்களையும், சர்வஜன அதிகாரம் 294,681 வாக்குகளையும் 226 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 139,858 வாக்குகளையும் 116 உறுப்பினர்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 89,177 வாக்குகளையும் 106 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.
குறித்த வாக்கு வங்கி வீதங்களை வைத்து நோக்கும் போது தமிழ் மக்களின் ஆதரவு ஆளுந் தரப்புக்கான ஒரு பாடமாக மாற்றியமைத்துள்ளனர். சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த தலைமைத்துவங்கள் ஒவ்வொரு சபைகளிலும் ஆட்சியமைக்க வேண்டிய தேவை உள்ளது இதனால் தவிசாளர்கள் தெரிவின் போது ஒற்றுமையாக செயற்பட்டால் தங்கள் பலத்தை அடைந்து கொள்ளலாம்.
குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மதிப்பிடப்பட்டது.அதனை சீர்செய்வதற்கான களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது.
தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் பொது எதிரியாக ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும் எனும் பிரச்சாரமே முதன்மையாக காணப்பட்டது. தேர்தல் முடிவுகளிலும் அத்தகைய விளைவினையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது. அவ்வாறே தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணிசமான சபைகளில் முன்னிலையை பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது.
2024-நவம்பரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 61.56 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் 43.37 சதவீதமான வாக்குகளையே பெற்றுள்ளார்கள். அவ்வாறே பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 17.66% மற்றும் பொதுஜன பெரமுன 3.14% வாக்குகளை பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 21.77% ஆகவும், பொதுஜன பெரமுன 9.20% ஆகவும் உயர்ச்சி அடைந்துள்ளமை கவனிக்கத்தக்க புள்ளிவிபரமாக காணப்படுகின்றது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதால் தேசிய மக்கள் சக்தி பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது.தேர்தல் முடிவுகள் தொடர்பில் கிழக்கிலங்கை திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஆர்.ரவி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மக்களை ஏமாற்றி இனவாத அரசியல் சாயம் பூசி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் வெற்றி அளிக்கவில்லை இதனால் அரசாங்கம் தங்களது வாக்குகளை குறைந்த நிலையில் பெற்றுள்ளதுடன் சபைகளில் பெரும்பான்மையுடனான ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலையை எட்டியுள்ளது என்றார்.
தேசிய மக்கள் சக்தி
எனினும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் சபைகளை வெற்றி கொள்ளக்கூடிய வகையிலாக முடிவுகளை பெற முடியவில்லை. திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை உள்ளிட்ட சபைகளில் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைக்க முடியாது.
ஆனாலும் கோமரங்கடவெல பிரதேச சபை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சபை என்பதால் அங்கு அவர்களுக்கான சாதக நிலை உள்ளது இது தவிர கிழக்கின் மட்டக்களப்பு திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் உறுப்பினர்கள் அதிக வட்டாரங்களில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர்.
எனினும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளில் பெரும்பான்மையைக் கூட பெறமுடியாத நிலையும், கொழும்பு மாநாகர சபையில் அறுதிப்பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத நிலையும் தேசிய மக்கள் சக்தியின் சரிவையே அடையாளப்படுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையின்மை பொதுவாக, தேசிய மக்கள் சக்தி கட்சி பொருளாதார நெருக்கடி, ஊழல், வறுமை மற்றும் அரசியல் மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை கூறி வந்தனர் அது மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கவில்லை.
ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களில், மக்கள் தங்களது அடுத்தடுத்த தேவைகளை தீர்க்கும் திறன் கொண்ட எதிர்பார்ப்பில் உள்ள கட்சிகளுக்கு வாக்களித்தனர். இதனால், தேசிய மக்கள் சக்தி கட்சியின் வாக்குகள் குறைந்தன. பிரதேச அடிப்படையிலான பிரச்சினைகள் உள்ளூராட்சி தேர்தல்கள் பொதுவாக பிரதேச அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் சவால்களை எதிர்கொண்டது. பிரதிநிதித்துவத்தின் குறைவு உள்ளூராட்சி அமைப்புகளில், மக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக பிரதிநிதிகளிடம் கொண்டு செல்ல விரும்புகின்றனர்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச ரீதியான பிரதிநிதிகள் குறைவாக இருந்ததால், மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. மற்ற கட்சிகளின் வலுவான பிரச்சாரங்கள் உள்ளூராட்சி தேர்தல்களில், பல்வேறு கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை வலுப்படுத்தியுள்ளன.
இவ்வாறு, பல்வேறு காரணங்களால், தேசிய மக்கள் சக்தி கட்சி உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது கட்சியின் எதிர்காலத் திட்டங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்யவும், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும் அவசியம் என்பதை நடை பெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 13 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
