பாம் எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க சதி..! ஜனாதிபதியை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறான வழிநடத்தி, பாம் எண்ணெய் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சகத்திற்குள் உள்ள குழு அதிகாரிகள் முயன்று வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பாம் எண்ணெய் இறக்குமதி முயற்சிகளை முறியடித்து, நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாம் எண்ணெய் இறக்குமதிக்கு முயற்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2021ஆம் ஆண்டில், நிபுணர்கள் குழு எடுத்த முடிவின் அடிப்படையில், பாம் எண்ணெய் இறக்குமதி மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இது, இந்த நாட்டில் உள்ள நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது.
இருப்பினும், நிதி அமைச்சகத்திற்குள் உள்ள ஊழல் அதிகாரிகள் குழு ஒன்று, தற்போது பாம் எண்ணெய் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அவர்கள் ஒரு நிதிநிலை அறிக்கை முன்மொழிவைப் பயன்படுத்தி, நாட்டிற்குள் பாம் எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அனுமதிக்கும் ஒரு வழியை உருவாக்க முயல்கின்றனர் என்றார்.