ரூபாயை மிதக்கவிட இணங்கியுள்ள அமைச்சர்கள்! - நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான முடிவு எப்போது?
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரூபாயை மிதக்க விடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என அமைச்சர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
ரூபாயை மிதக்க விடுவது சம்பந்தமாக அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களின் இணக்கமும் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெறுவதற்கு அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் இறுதி முடிவை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கலாம் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 200 ரூபாய் என்ற எல்லைக்குள் இருந்து வருகிறது.
எனினும் நாட்டில் வங்கிகளுக்கு வெளியில் நாணயங்களை மாற்றுவோர் மற்றும் சர்வதேச நாணய மாற்று நிறுவனங்களில் டொலரின் விலை 250 ரூபாயாக இருந்து வருகிறது.