நீதிச்சேவை சங்கத்தின் அதிகாரிகளை நாடாளுமன்றுக்கு அழைக்கக்கோரும் நீதியமைச்சர்
நீதிச் சேவை சங்கத்தின் (ஜேஎஸ்ஏ) முக்கிய அதிகாரிகளை சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவிற்கு அழைக்குமாறு¸ நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜேஎஸ்ஏ வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிச்சேவை சங்கத்தின் அறிக்கையின் மூலம் தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், நீதிச்சேவை சங்கத்தின் தலைவரும் செயலாளரும் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சர் ராஜபக்ச தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, பாலினம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய நியாயாதிக்கம் தொடர்பில், அமைச்சர் விஜயதாச வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நீதிச்சேவை சங்கம் தமது விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தது.
அறிக்கை வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கம்
இது தொடர்பிலேயே அமைச்சரின் தற்போதைய செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பின் கீழ் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறை அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீதியமைச்சர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் 19 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற அறிக்கைகள் நாட்டின் நீதி அமைப்பு மீது மக்கள் வைத்திருக்கும், நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |