இந்தியப் பிரதமர் மோடிக்கு அவதூறு: மின்சார சபை தலைவர் மீது வழக்கு தொடரப்போவதாக சஜித் எச்சரிக்கை
இலங்கை மின்சார சபைத் தலைவருக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டொன்றை முன்வைக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக தெரிவித்த பொய் கருத்துக்கு எதிராகவே வழக்கு தொடுக்க இருப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் நடைபெற்ற கோப் குழு விசாரணை இடம்பெற்றுள்ளது.
வடக்கின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான அனுமதியை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தார் என்று பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
பின்னர் தான் அவ்வாறு கூறியது தவறு , களைப்பு மற்றும் மனஅழுத்தம் காரணமாக தான் அவ்வாறான பொய்த் தகவல் ஒன்றை கூறியதாகவும் அவர் மனவருத்தம் தெரிவித்திருந்தார்.
எனினும் நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னால் பொய் உரைப்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் பாரிய குற்றச் செயலாகும்.
அந்த வகையில் மின்சார சபைத் தலைவர் பெர்னாண்டோவுக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் முறைப்பாடு செய்யவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்சார சபைத் தலைவர் யாரோ ஒருவருடைய அழுத்தங்களுக்கு அடிபணிந்தே தனது முன்னைய கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.