மைத்திரி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன கூறியமை பற்றி விசாரிக்க வேண்டும்:கத்தோலிக்க மத குருமார்
ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தமை சம்பந்தமாக உடனடியாக விசாரணையை நடத்துமாறு கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயத்தின் மத குருமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கொழும்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து இந்த கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கொழும்பு பேராயத்தின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ஜூட் கிறிஸ்சாந்த, கொழும்பு செத்சரண நிறுவனத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய லோரன்ஸ் ராமநாயக்க உட்பட மேலும் சில கத்தோலிக்க மத குருமார் மற்றும் சட்டத்தரணிகளும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றிருந்தனர்.
கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை செய்ததாக வணக்கத்திற்குரிய ஜூட் கிறிஸ்சாந்த தெரிவித்துள்ளார்.