காணாமலாக்கப்பட்டோர் குறித்து 2000ஆம் ஆண்டுக்கு முன் கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை
இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு கிடைக்கப்பெற்ற 10531 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்படவுள்ளன, அவற்றுக்காக 375 மில்லியன் தேவைப்படுவதாக நீதிமன்றங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கை காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் மேற்கொண்ட முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (29) அலரி மாளிகை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையை கொண்டு செல்லுதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இது அரசியல் வாக்குறுதியோ அல்லது நெஞ்சை நெகிழ வைக்கும் கண்காட்சி அல்ல. இவர்கள் தெற்கு, வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களாவர். இலங்கை காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு குறித்த விசாரணைகளை கொண்டு செல்வது மிகப் பாரிய நடவடிக்கையாகும்.
அதற்காக நாம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்துள்ளோம். இவற்றுக்கான நிதியாக 375 மில்லியனை கோரியுள்ளோம். ஏனென்றால் ஒரு முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக 25 குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஒரு முறைப்பாட்டுக்காக 45 நிமிடங்கள் தொடக்கம் ஒரு மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.
உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை
இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ் உறவுகள் இன்று அவர்களின் அன்புக்குரியவர்களை தேடுகின்றனர்.
அதேபோல் தென் பகுதியிலும் கிளர்ச்சியில் காணாமலாக்கப்பட்டவர்களின் சிங்கள குடும்பத்தினரின் வலி அவர்களின் உள்ளங்களில் இன்றும் குடிகொண்டுள்ளது. உண்மையை தெரிந்து கொள்வதற்கு அனைத்து குடும்பத்தினருக்கும் உரிமை உண்டு.
அது அரசாங்கத்தால் வழங்கப்படும் பரிசு அல்ல. மேலும் நாம் நினைவு கூரல்களை செய்வதற்கான உரிமையையும் நிலைநாட்டியுள்ளோம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
