அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களின் கைது தொடர்பில் ஊடக அமைச்சர் கூறியுள்ள விடயம்
இலங்கையில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பாக அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் போது அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்படும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர், தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தி ஆசிரியர்களின் குழுவுடனான (Editors Guild) சந்திப்பில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஊடகத்துறையில் புதிய போக்குகள் மற்றும் அண்மைய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு 1973ஆம் ஆண்டின் எண்.5 பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்தி புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த ஆசிரியர் குழு, சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு ஒரு தனி பொறிமுறையை அமைப்பது பொருத்தமானது என்று கூறியது.
இதேவேளை நாட்டின் 3024 பாடசாலைகளில் 2000 பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் ஊடக வட்டங்களை அமைத்து, எதிர்காலத்தில் அவற்றுக்கு நிதியுதவி அளிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் 3000 ஊடகவியலாளர்களை உள்ளடக்கும் வகையில் ஊடகக் காப்புறுதித் திட்டம் முறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அழகப்பெரும கூறியுள்ளார்.