எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டமைக்கு அமைச்சர் கம்மன்பிலவே காரணம்
துறைக்கு பொறுப்பான அமைச்சர் கச்சாய் எண்ணெய்யை சரியான நடைமுறைக்கு அமைய இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித (Ananda Palitha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கச்சாய் எண்ணெய் இறக்குமதியின் போது, பதிவு செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து விலை மனுக்களை பெற்று, நீண்டகாலமாக அவர்கள், இலங்கைக்கு கச்சாய் எண்ணெய்யை விநியோகித்துள்ள விதம் பற்றி கவனத்தில் கொண்டு விலை மனுக்களை வழங்க வேண்டும்.
எனினும் துறைக்கு பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பில நைஜீரியா நிறுவனம் ஒன்றுக்கு அந்த விலை மனுவை வழங்கினார். இலங்கையில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு பகிரங்க அழைப்பை விடுக்காது, அந்த விலை மனுவை அமைச்சர் கம்மன்பில நைஜீரிய நிறுவனத்திற்கு வழங்கினார்.
பெட்ரோல், டீசல் என்பன வந்தன. எனினும் கச்சாய் எண்ணெய்யை இந்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. ஜூன் மாதத்திற்கு பின்னர் நைஜீரிய நிறுவனத்தினால், கச்சாய் எண்ணெயை வழங்க முடியாமல் போனது.
அதனை நிறுவனம் கைவிட்டதால், உடனடியாக பணத்தை செலுத்தி கொள்வனவு செய்யும் நிலைமை அமைச்சருக்கு ஏற்பட்டது. எம்மிடம் இருந்த சிறந்த விநியோகஸ்தர்கள் இதுவரை விலை மனுக்களை கோரி விண்ணப்பிக்கவில்லை.
தரகு பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து அமைச்சர் உதய கம்மன்பில தவறு செய்து விட்டார்.
ஒக்டோபர் 5 ஆம் திகதி பிறகு கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. உலகில் தட்டுப்பாடு இல்லாத நிலையில், இறக்குமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக 50 சத வீதம் குறைவாக எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டது எனவும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
