போராட்டக்காரர்களை புறகணித்த நீதி அமைச்சர் - கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்
யாழ். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு பணிகளை நேற்றைய தினம்(19.06.2026) நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் பார்வையிட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது.
புறக்கணிக்கப்பட்ட போராட்டக்காரர்கள்
இந்த நிலையில், புதைகுழியை பார்வையிட வருபவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்தப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி வேண்டும், புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் புதைகுழி அமைந்துள்ள பகுதியை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் புறக்கணித்துச் சென்றுள்ளனர்.
தம்மை புறக்கணித்து, தமது கோரிக்கைகளை நின்று கேட்க முடியாதவர்கள் தமக்கான நீதியினை பெற்று தருவார்கள் என நம்ப வேண்டுமா என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன், அவநம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.