ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போராளிகளுள் நானும் ஒருவன்: டக்ளஸ் எடுத்துரைப்பு
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராளிகளுள் நானும் ஒருவன் எனவும், போராட்டத்திற்கு முன்னர் மக்கள் யாரிடமும் எந்தவொரு தோவைக்கும் கையேந்தியிருக்கவில்லை என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குபிராந்திய சாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்காலத்துக்கான மீளெழுச்சி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்துபோன நாள்களிலிருந்து பாடம் கற்காவிட்டால் காலம் அந்த நாட்களை திருப்பிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இதர தமிழ் தரப்பினர் செயற்படுவது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.
ஆயுதப் போராட்டம் முன்னெடுகும் முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக மட்டுமல்ல எந்தவொரு தோவைக்கும் கையேந்தியிருக்கவில்லை.
வரலாற்று உண்மை
ஆனால் 1987களின் பின்னரான திசைவழிமாறிய ஆயுதப் போராட்டமே இவ்வாறான நிலைக்கு தமிழ் மக்களை தள்ளியுள்ளது.
இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஆனால் இவ்வாறான நிலைக்கு மக்கள் வந்துள்ளது மனதுக்கு வேதனையானாக உள்ளது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராளிகளுள் நானும் ஒருவன் என்ற வகையில் இதற்கு தார்மீக பொறுப்பை நானும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்தது. ஆனால் அந்தக் களச்சூழல், சர்வதேசத்தின் பார்வைகளை வைத்து அதிலிருந்து விடுபட்டு மாற்றுபொறிமுறைக்கு செல்லவேண்டியிருந்ததும் அவசியமாக இருந்தது.
ஆனால் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுத வழியிலான போராட்டம் எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு சாத்தியமாகாத ஒன்று அல்ல என்று வெளிப்படையாக எடுத்துக் கூறியது.
அதனால் நாம் நாடாளுமன்ற ஜனநாயக வழியில் எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள காலடி எடுத்து வைத்திருந்தோம். அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.
இதேநேரம் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என தெரிந்தும் தமது நலன்களுக்காக ஆயுதப் போராட்டம்தான் சாத்தியம் என்று கூறி மக்களை தவறாக அல்லது வலுக்கட்டாயமாக இழுத்து அழிவு பாதைக்கு கொண்டு சென்று தற்போது மக்களை இத்தகைய நிலைக்கு கொண்டுவந்துவிட்ட தரப்பினரை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
தமிழ் அரசியல் தரப்பினர்
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தை ஒருபோதும் தானாக விரும்பி கைவிடவில்லை. மாறாக எல்லாமே முடிவுக்கு வரவேண்டிய கட்டாய சூழலில் யுத்தமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதற்காக தமிழ் மக்கள் தோற்றுப்போனதாக அர்த்தப்படாது. தமிழ் மக்கள் ஒருபோதும் தோற்றுப் போகவும் இல்லை. தோற்றுவிடவும் மாட்டார்கள். அந்தவகையில் தமிழ் அரசியல் தரப்பினர் கடந்தகால வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாத வரை வரலாறு அதை மீண்டும் மீண்டும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.
அதன் அடிப்படையில் நிலையான சமாதானம் மற்றும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு தமிழ் தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரவேண்டும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |