அமைச்சர் சந்திரசேகரன் கல்மடுநகர் பகுதி மற்றும் கல்மடு குளம் ரங்கன் குடியிருப்பு பகுதிகளுக்கு விஜயம்
கல்மடு குளத்தின் வான்பகுதியை இரண்டு அடி உயரத்திற்கு உயர்த்தித் தருமாறு விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை மிக விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இன்றையதினம் (03.07.2025) கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுகுளம் மற்றும் அதை அண்டிய கிராமங்களை வசிக்கும் மக்களின் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அவர்களின் தேவைகளை கேட்டு அறிவதற்காக கல்மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
மற்றும் கல்மடு. ரங்கன் குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் தமக்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை இப்பகுதியில் உள்ள அரச காணியில் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் தமது பகுதியில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த இளைஞர்கள் இருக்கின்றார்கள்.
அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு மைதானம் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தனர். இதன்போது இளைஞர்கள் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்து தருவீர்களாயின் எமது பகுதியில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு விளையாட்டு ஓர் முக்கியமாக அமையும் என கோரியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில், "கண்டாவளை பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு இனம் காணப்பட்ட காணியினை அரச காணியாயின் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் சேரன் அரிசி ஆலையில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்ததாகவும் தற்பொழுது அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் வேற தொழிலும் இன்றி மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கல்மடுநகர் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்று தருவதற்குமாக தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த சேரன் அரிசி ஆலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மீண்டும் அதனை இயக்குவதற்கு அல்லது மக்களுக்காக அந்த அரிசி ஆலையின் மீளவும் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், அப்பகுதியில் காணப்படுகின்ற அரச காணியினை காணி இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.


