இந்திய கடற்தொழிலாளர்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை! அமைச்சர் அறிவிப்பு
இந்திய கடற்தொழிலாளர்களால் இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதம் 25ஆம் திகதி எங்களுடைய அதிகாரிகள் இந்தியாவுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் செல்வது கச்சத்தீவைப் பற்றி பேசுவதற்கு அல்ல; அவர்கள் செல்வது கடற்தொழிலாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக பேசுவதற்கு.
கடற்தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை
அதன்பொழுது கடற்தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளும், அதேநேரத்தில் இந்திய இழுவைப்படகுகள் மூலமாக எங்களுடைய கடலை அத்துமீறி, எங்களுடைய கடலில் வாழுகின்ற எங்களுடைய கடற்றொழிலாளர்களுடைய வாழ்க்கையையும் நாசம் செய்கின்ற, எங்களுடைய கடல் வளங்களை அழிக்கின்றமை தொடர்பான உரையாடலாக இருக்கும்.

அந்த உரையாடலுக்கான ஆயத்த வேலைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போது, நேற்று நானும் கூட பார்த்தேன், இந்திய தமிழ்நாட்டின் சட்டசபையில் இந்த கச்சத்தீவு பிரச்சினை பற்றி பேசப்படுகின்றது.
கச்சத்தீவு பிரச்சினை
கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமான தீவு, அதனால் இந்தத் தீவை மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றெடுக்க வேண்டும் என்கின்ற ஸ்லோகங்கள் நேற்று உருவானது அல்ல. இது கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பேசப்படுகின்ற, முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.
இருந்தபோதிலும் கூட நாங்கள் இதற்கு முன்னரும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்; இது சர்வதேசத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, சர்வதேச சட்டங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, சர்வதேச எல்லை நிர்ணயிக்கப்படுகின்ற நிறுவனங்களை எடுத்துக் கொண்டாலும் கூட, இந்த கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது யாருக்கும் சொந்தமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening