ஈரான் போரினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு: ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர், உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டம் தனது புதிய ஆய்வில் எச்சரித்துள்ளது.
இந்த மோதலால் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் அடிப்படை உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்போரானது தொடங்கியதில் இருந்து, சோமாலியாவில் மட்டும் கூடுதலாக 2.5 மில்லியன் மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
ஈரானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் 2.3 மில்லியன் மக்களும், இலங்கையில் சுமார் 1.3 மில்லியன் மக்களும் கடுமையான பசி மற்றும் உணவுப் பற்றாக்குறையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் நீடித்தால் உலகளவில் சுமார் 45 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாக நேரிடும் என்று கடந்த மார்ச் மாதமே உலக உணவுத் திட்டம் எச்சரித்திருந்தது.
தற்போது, இப்போரின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், தங்களின் முந்தைய கணிப்பு இப்போது மெய்யாகி வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த மோதலானது ஒரு பிராந்தியப் போராக விரிவடைந்துள்ளது.
இனிவரும் காலங்களில் இந்த வன்முறைகள் குறையத் தொடங்கினாலும் கூட, வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை வறிய மற்றும் நடுத்தர நாட்டு மக்களின் அன்றாட உணவை நேரடியாகப் பாதித்துள்ளதை இந்த ஐக்கிய நாடுகள் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.