பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம்
நாட்டில் மீண்டும் பால்மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கையில் மீண்டும் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் 4 இலட்சம் கிலோ பால்மா உள்ளடக்கிய 17 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக தேங்கியுள்ளன.
பால் மாவின் விலையை அதிகரிக்க நேரிடலாம்
இந்த 17 கொள்கலன்களுக்கு 40 இலட்சம் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க நேரிடலாம் எனவும் அதன் தலைவர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து பால்மா வை விநியோகிக்கும் முகவர்கள் இந்தப் பால் மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு தெரிவிக்கின்றனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கப்பலில் பால்மா ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் வரும் போது ஒரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.