கோட்டாபயவிற்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் - இந்தியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதனை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - உங்களுடைய ஒருங்கிணைக்கப்பட்ட தந்திரோபாயத்தில் தமிழ் மக்களின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லையே? இலங்கையின் வடக்கில் உள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதில் இந்தியா பங்களிப்பு செய்ய முடியாது என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில் - ஜனநாயகம் பன்முகதன்மை ஆகிய விடயங்களில் இருநாடுகளும் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் நாங்கள் ஒருவரிடமிருந்து மற்றையவர் கற்றுக் கொள்ள பல விடயங்கள் உள்ளன என ஒருங்கிணைக்கப்பட்ட தந்திரோபாயத்தில் நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இந்தியா பங்களிப்பு செய்ய முடியாது என தெரிவிப்பது குறித்து எந்த கேள்வியுமில்லை.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த சூழமைவு தொடர்பில் நாங்கள் புதிதாக சிந்திக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். இலங்கையில் நாங்கள் பிளவுபட்ட விதம் - நாங்கள் மிகவும் துருவமயப்படுத்தப்பட்டுள்ளோம்.
நாங்கள் கட்சி அடிப்படையில் இன அடிப்படையில் மத மொழி அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டுள்ளோம். நல்லிணக்கம் என்பது அனைவருக்குமானதாக காணப்படவேண்டும். ஏனென்றால் இலங்கை முழுவதும் அந்த அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதனை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
இந்தியாவும், இலங்கையும் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இறுதியில் இந்தியாவின் ஆதரவுடன் எங்களிற்கான தீர்வை நாங்களே உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.