பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
எமது எரிசக்தி கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டால், அதற்கான பதிலடி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், கார்க் தீவின் இராணுவ இலக்குகளை ஏற்கனவே தரைமட்டமாக்கிவிட்டோம். தேவைப்பட்டால் வெறும் வேடிக்கைக்காக இன்னும் சில முறை அங்கு குண்டுவீசுவோம் எனத் தெரிவித்திருந்தார்.
கடுமையான கண்டனம்
இந்த நிலையில் டிரம்ப்பின் இந்த கருத்திற்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் யாரோ ஒருவரின் பொழுதுபோக்கிற்காக இங்கு மக்கள் கொல்லப்படுகிறார்கள். எமது எரிசக்தி கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டால், அதற்கான பதிலடி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தைக் கையாளும் கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
இன்றைய (16.03.2026) நிலவரப்படி, இந்தத் தாக்குதலானது போர்க்களத்தில் கடுமையான புதிய சமன்பாட்டை உருவாக்கும் என ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி எச்சரித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற அண்டை நாடுகளிலிருந்தே முன்னெடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதுடன், அந்த நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களும் எமது இலக்குகளே என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.