முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதையை நினைவுகூரும் கஞ்சி (Photos)
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியானது இன்று(12) காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 06 நாட்களிற்கு குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
மன்னார் - பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது இன்றைய தினம் (12) காலை 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து பள்ளிமுனை பங்குத்தந்தையின் மத பிரார்த்தனை யை தொடர்ந்து அங்கு கூடி நின்றவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க உறுப்பினர்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் "கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆரம்ப நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மே 12 முதல் மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மேற்கு பொது சந்தை அமைந்திருந்த பகுதியில் கஞ்சி வழங்கு செயற்பாட்டை காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்துள்ளனர். கஞ்சி ஆக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் 25 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்' எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுமாமி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து கஞ்சி காய்ச்சப்பட்டு அவற்றினை மக்களுக்கு வழங்கி தமது துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மக்களின் உணர்வுகள் சர்வதேச சமூகத்தினால் மதிக்கப்பட்டு அவர்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் வடகிழக்கு மாகாண வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் லவகுமார்,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்களாக அருட்சகோதரர் ஜெகநாதன் அடிகளார்,எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு நகர் மற்றும் பிரதான பஸ்நிலையம் என்பவற்றில் கஞ்சிகள் பகிரப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றுமுதல் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
வவுனியா இலுப்பையடியில் இடம்பெற்ற நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வீதியால் சென்ற பொது மக்களுக்கும் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே -12) இல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலயத்தில் ஒன்று கூடியவர்கள் உப்பில்லாத கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள் மற்றும் பேருந்து தரிப்பிடங்களில் இருந்தோர்கள் என பலருக்கும் வழங்கினார்கள்.
அத்துடன் முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 2009 இறுதி யுத்த காலப்பகுதியில் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது.பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை
வாங்குவதற்கு எந்த உணவுப் பொருளும் இருக்கவில்லை.இந்நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவணங்களும் இணைந்து உயிர் பிழைப்புக்கென முள்ளி வாய்க்கால் கஞ்சி ' என்கின்ற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர்.
நீரினுள் அரிசியை இட்டு கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ்வுணவாகும். இவ் உணவினை பெற்றுக்கொள்ள சிறுவர்கள்இமுதியவர்கள்இகர்ப்பினி பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதன்போது கொத்துக் குண்டுகளாலும் விமானத் தாக்குதல்களாலும் பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன.
நீதி கேட்டு போராடும் எம் மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள் வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பெருவலியாகவும்இஅடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது வரலாற்று கடமையாகும் என்றும் உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்படுகிறது
.குறித்த நிகழ்வானது மே-12 தொடக்கம் மே-18 வரை 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வாரத்தினை நினைவு சுறும் தினமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினவு கூறப்படவுள்ளது.
இதேவேளை இவ் வருடமே முதல் தடைவையாக கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை 'முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்' அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.