அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத் தூபி - கொந்தளிப்பில் தமிழர்கள்..
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி அடையாளம் தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அடித்து நொறுக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவுத்தூபி
வல்லை - அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது.

தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நினைவுத் தூபியே அடையாளம் தெரியாத நபர்களால் திட்டமிட்டு இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஒரு தலைவரின் நினைவுச் சின்னம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டனத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களும் அயலவர்களும் வலி.வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், நினைவுத் தூபியை மீளப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்