யாழில் கார்த்திகை வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு (Photo)
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீர (Rohana Wijeweera) மற்றும் ஏனைய உறுப்பினர்களின் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் 32ஆவது 'கார்த்திகை வீரர்கள் தினம்' யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
அக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழிலுள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்பது 1989 நவம்பர் 13 ஆம் திகதி ஜே.விபியின் ஸ்தாபகர் ரோகண விஜேவீர உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டதை ஒவ்வொரு வருடமும் நினைவுகூருவது வழமையாகும்.
யாழ்ப்பாணத்தில் இந்த நினைவுதினம் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும்.படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் தீபங்கள் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அக்கட்சி உறுப்பினர்கள் சுகாதார நடைமுறைப்படி நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.





