துப்பாக்கி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : மீள் பரிசீலனை செய்ய வலியுறுத்தும் சிறீதரன் எம்.பி
பொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமை. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்களுடன் சமகால அரசியல் நிலமைகள் மற்றும் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு அச்ச நிலைமை உள்ளதாக ஜனாதிபதியே குறிப்பிடுகின்றார்.நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.பிரதேச சபை தவிசாளர் அவரது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக்கொல்லப்படுகிறார்.

போக்குவரத்து பாதையில் எதுவும் நடக்கலாம் என்ற அச்ச நிலைமையே காணப்படுகிறது.
அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம்.போதைப்பொருள் பாவனை என்பது தென்னிலங்கையினை மாத்திரமல்ல வடமாகாணத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆயுதம் தந்தால் இயக்குவதற்கு பயிற்சிகள்
பொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமை. 2010 இல் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது எனக்கு துப்பாக்கி வழங்கப்பட்டது. அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்பு மீளவும் ஒப்படைத்திருந்தேன்.

துப்பாக்கி வழங்கப்பட்டால் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே சுடுபட்ட வரலாறுகளும் உண்டு.
துப்பாக்கி வைத்திருப்பது ஆபத்தானது. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்.அதன் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவைப்பட்டால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவரை நான் ஆயுதம் தருமாறு அரசாங்கத்தை கேட்கவில்லை ஆயுதம் தந்தால் அதை இயக்குவதற்கு பயிற்சிகள் எவையும் எனக்கு தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |