மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் விடுத்த கோரிக்கை(Photo)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமாக தீர்க்கப்படவேண்டிய மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (14) கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் மூலமாக விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையில், நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
உணவு, அன்றாடத் தேவைகள், எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கும் பெரும் இறுக்கமான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
முக்கியமாக விவசாயிகளை பொறுத்தவரையில் இரசாயன உரப் பிரச்சினை அவர்களது வாழ்வாதாரமான வேளாண்மை மற்றும் பயிர்ச் செய்கையின் விளைச்சலை வீழ்ச்சியடைய செய்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் இப் போகத்திலும் உரம் சரியான முறையில் விநியோகிக்கப்படுமா என்பது புரியாமலிருக்கிறது. இதற்கு நம்முடைய மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் விதிவிலக்கானதல்ல.
இந்த நிலையில் மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள் சரியான முறையில் அவர்களை சென்றடைவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விவசாயம்
விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தரிசு நிலங்களை பயிர்ச் செய்கைக்குட்படுத்தும் வேலைத்திட்டத்தினை விரைந்து எமது மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும்.
அதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என எண்ணுகிறேன். அதற்கு அனைத்து தரப்பினருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை மாவட்டத்தில் விரைந்து நடைமுறைப்படுத்தும் வகையில், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்கள், கால்நடை பண்ணையாளர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய வகையில் விசேட ஆராய்வுக் கூட்டம் ஒன்றினை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்ற வகையில் இவ்விடயம் குறித்து தங்களது விரைந்த
நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



