உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! - பாப்பரசர் - கர்தினால் நாளை சந்திப்பு
வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை, நாளை தினம் (28) உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்கு புனித பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளார்.
இந்த கலந்துரையாடல், பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் கார்டினால் ஆகியோருக்கு இடையே மட்டுமே நடக்கவுள்ளதாகவும் வேறு யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள கர்தினால், இன்று (27) பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நடைபெறும் ஆராதனையில் கலந்து கொள்ள உள்ளார்.
கர்தினால் உடனான ஆராதனைகளில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஐரோப்பாவில் வாழும் இலங்கை கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு கூடும் கிறிஸ்தவர்கள் மற்றும் கர்தினால்கள் பங்கேற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை பாப்பரசரை சந்தித்த பின்னர் கர்தினால் பெரும்பாலும் ஜெனீவா செல்வார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரை தளமாகக் கொண்ட யுனைடெட் கிறிஸ்டியன் சிறிலங்கா அறக்கட்டளை கர்தினால் ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐரோப்பாவிலுள்ள இலங்கை கிறிஸ்தவர்களை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை துசித சோலங்கராச்சி, இவ்வருடம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 46வது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜெனீவா சென்றுள்ள துசித சோலங்கராச்சி, உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெறும் இடைக்கால அமர்வில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி உரையாற்ற உள்ளார்.
உயிர்த்த ஞாயிறு படுகொலை ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
