சூடுபிடிக்கும் ஞானசார தேரரின் கைது: ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவசர சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிவில் உடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பில் மூன்றுபீட மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம் குறித்தே இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1:00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஞானசார தேரருக்கு சாதாரண ஆடைகளை அணிவித்து நீதிமன்றத்தில் முன்னிலை
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சாதாரண ஆடைகளை அணிவித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை தொடர்பில் மும்பீட மகாநாயக்க தேரர்கள் நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தனர்.
ஞானசார தேரரை அவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்த விதம் குறித்து தாங்கள் அதிர்ச்சியும் கடும் கவலையும் அடைந்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
துறவி ஒருவரின் காவி உடையை அகற்றுவது அல்லது துறவறத்தை ரத்து செய்வது என்பது வெறும் அரச நிர்வாக அல்லது சிறைச்சாலை ஒழுங்கு விதிகளுக்குட்பட்ட விடயமல்ல எனவும், அது மகா சங்கத்தினருக்கு உரிய சாசனப் பணி எனவும் மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஞானசார தேரரின் துறவறத்திற்கு பாதிப்பு
ஞானசார தேரரின் துறவறத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான தீவிர குற்றத்தை இழைத்துள்ளார் என்றோ அல்லது துறவறத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றோ சங்க சபையினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத பின்னணியில், சிறைச்சாலை நிர்வாகம் இவ்வாறான நடவடிக்கையை எடுத்தமை முழு புத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்கும் சவாலாக அமைவதுடன், பௌத்த மரபுக்கு இழைக்கப்படும் தீங்காகும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு துறவியின் துறவறம் சார்ந்த விடயங்கள் தொடர்பில், அத்துறவி சார்ந்த பீடத்தின் பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளுக்கு அமைய சிறைச்சாலைத் திணைக்களம் செயற்படுவதே பொருத்தமானது என மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்கும் சிறைச்சாலை விதிகளுக்கும் பாதகம் ஏற்படாத வகையில், ஞானசார தேரர் சிறையில் இருக்கும் காலப்பகுதியில் அவரது துறவறத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு செயற்பட சந்தர்ப்பமளிக்குமாறும், எதிர்கால நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அவரை முன்னிலைப்படுத்தும்போது தொடர்ந்து துறவியாக தோன்றுவதற்கு தேவையான நிர்வாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பொருத்தமானது எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam