ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் காட்டுத் தீ: 40இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு (Photos)
அல்ஜீரியா, இத்தாலி, கிரீஸ் ஆகிய மத்தியதரைப் பிராந்திய நாடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக வீசி வரும் வெப்ப அலை காரணமாக, அல்ஜீரியா, இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத் தீ தீவிரமாகப் பரவி வருகிறது.
இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஐக் கடந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா்.
தற்போது ஐரோப்பாவில் ‘சா்பரஸ்’ எதிா்ப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு ‘கேரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக இத்தாலியின் 16 முக்கிய நகரங்களுக்கு அந்த நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பிடங்களை விட்டு செல்ல வேண்டிய நிலை
கிரீஸின் சில பகுதிகளில் வெப்ப நிலை 111 டிகிரியைத் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலியின் சிசிலி, புக்லியா ஆகிய பகுதிகளிலும் காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கானோா் தங்கள் இருப்பிடங்களை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேகமாக வீசிவரும் காற்றும், வெப்பத்தால் காய்ந்துபோன மரம், செடி கொடிகளும், காட்டூத்தீயை கட்டுப்படுவத்துவதில் தீயணைப்பு வீரா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக அல்ஜீரியாவில் மட்டும் 34 போ் காட்டுத்தீக்கு பலியாகியுள்ள நிலையில் அவா்களில் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 10 இராணுவ வீரா்களும் பலியாகியுள்ளனர்.
அந்த நாட்டில் 80 சதவீத காட்டுத் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்தாலும், தொடா்ந்து பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 8,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஐரோப்பாவில் அண்மையில் வீசிய ‘சா்பரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள ‘எதிா்ப் புயல்’தான் காரணமாக அங்கு வெப்ப அலை வீசி வருகிறது.
வெப்ப அலை என்றால் என்ன
பொதுவாக, வளிமண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று வேகமாகச் சுழல்வது புயல் எனப்படுகிறது.
அதுவே, உயா் அழுத்த மண்டலம் உருவாகி, அதைச் சுற்றிலும் காற்று மெதுவாக சுழலுமாயின் அது ‘எதிா்ப் புயல்’ எனப்படுகிறது. புயலின் மையப் பகுதி வேகமாக நகா்ந்து செல்லும்.
ஆனால், அதற்கு எதிரான தன்மை கொண்ட எதிா்ப் புயலின் மையப்புள்ளி மிக மிக மெதுவாக நகரும். சில பகுதிகளில் அது தற்காலிகமாக நிலைத்துகூட நின்றுவிடும்.
அதுபோன்ற நேரங்களில் காற்றில் ஏற்கெனவே இருக்கும் வெப்பம் இன்னும் அதிகரித்து அந்தப் பகுதிகளில் அதீத வெப்பநிலை ஏற்படும். அதைத்தான் வெப்ப அலை என கூறப்படுகிறது.
மேலும் கிரீஸின் ரோட்ஸ் தீவில் பற்றியெரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் 70,000 போ் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |














