அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு : மக்கள் பாதிப்பு (Video)
இலங்கையில் ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதற்கமைய, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்
மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் இன்று (20) காலை தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது .
இதனால் தூர இடங்களில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த வயோதிபர்கள்,பெண்கள்,கர்ப்பிணிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : ஆஷிக்
திருகோணமலை
இந் நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிபகிஷ்கரிப்பானது பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்றது அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராணுவ மனோபாவத்துடன் செயல்படுவதாகவும் சேவை இல்லாத மருத்துவமனை மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களின் வேலைவாய்ப்புப் பட்டியலுக்குப் பின் அடுத்த வாரப் பட்டியலைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இன்று திங்கட்கிழமை அமுலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சு அக்கறை காட்டவில்லை என்றால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மத்திய குழுவின் அவசரக் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை கூட்டி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் சுகாதாரத்துறை செயலாளரின் இந்த செயல்பாடு குறித்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் புகார் ஒன்றும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி திருக்கோமலை பொது வைத்தியசாலையில் 176 வைத்தியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட வேண்டும் இருப்பினும் தற்போது 101 வைத்தியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இவற்றுள் 27 வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாவும் அவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டால் 74 வைத்தியர்களே மிகுதியாக பணியில் இருப்பார்கள்.
குச்சவெளி கோவிட் வைத்தியசாலையில் 80 கோவிட் நோயாளிகள் சிகிச்சைபெற்று வரும் நிலையில் அவர்களை பராமரிக்க மூன்று வைத்தியர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் இவ்வாறான குறைபாடுகள் மேல்குறிப்பிட்ட நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களின் ஊடாக இடம்பெறுவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள் காத்திருந்திருக்க வேண்டிய நிலையேற்ப்பட்டதுடன், தூர இடங்களில் இருந்து வருகைதந்த நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி திரும்பி செல்வத்தினை அவதானிக்கமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர நோயாளி பராமரிப்பு சேவைகள்,மற்றும் கிளினிக் சேவைகள் எந்தவித இடையூறும் இன்றி வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் மணித்தியாலய அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதோடு ,வெளிநோயாளர் பகுதிகள் மற்றும் சத்திர சிகிச்சை கூடங்களும் செயற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : எப்.முபாரக், பதுர்தீன் சியானா
மலையகம்
இலங்கையில் ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அத்துடன், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயலிழந்தமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை, டயகம, அக்கரப்பத்தனை, உடபுஸ்ஸலாவ போன்ற வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மன்னார், திருமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!