சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி : விஸ்தரிக்க நடவடிக்கை
இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் கடுமையான இடநெருக்கடிக்குத் தீர்வாக, சிறைச்சாலைகளை விஸ்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் வழிகாட்டலில் சிறைச்சாலைகள் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காணிகளைக் கொள்வனவு செய்ய
சுமார் பதினைந்து முதல் இருபது ஆண்டுகளாக சிறைச்சாலைகளின் இடநெருக்கடி ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.
அதற்குத் தீர்வாக, தற்போதுள்ள சிறைச்சாலைகளின் இடப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் பிரகாரம் கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை(CRP) என்பவற்றைத் தவிர, இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் சிறைச்சாலைகளின் இடவசதி விஸ்தரிக்கப்படவுள்ளது.
அதற்காக தேவையான இடங்களில் காணிகளைக் கொள்வனவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை வெகுவிரைவில் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடத்திலிருந்து ஹொரணையில் உள்ள மில்லேவ பகுதிக்கு மாற்றும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாதாரண வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள்
தற்போதைக்கு இருபத்து நான்கு ஆயிரம் போதைப்பொருள் வழக்கு தொடர்பான நபர்கள் சிறையில் உள்ளனர். அவர்களுக்குப் பிணை வழங்கப்படுவதைத் தடுக்கும் முக்கிய காரணம், பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஆகும்.

அதற்கான தீர்வாக, பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்குத் தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைக்கு ஒரு வருடம் அளவில் தாமதமாகும் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்குவதற்கான ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் போதைப்பொருள் போன்ற பாரிய வழக்குகளுடன் தொடர்பில்லாத சாதாரண வழக்குகளுடன் தொடர்புடைய நபர்களைச் சிறையில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பிணை வழங்கி வீட்டுக் காவலில் அவர்களைக் கண்காணிக்கும் முறை குறித்தும் நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.