மயிலத்தமடு மேய்ச்சல் தரை போராட்டமும்! மட்டக்களப்பு அமைச்சர்களின் திண்டாட்டமும்!
மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் தொடர்கிறது. அத்துமீறி குடியேறும் சிங்கள விவசாயிகள் மட்டக்களப்பு கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி கொலை செய்து வருவதை தடுக்க முடியாத அவலம் மேய்ச்சல் தரைகளான மயிலத்தமடு மாதவனை பகுதியில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டி சந்தியில் எதிர்வரும் மார்ச் 15இல் ஆறு மாதங்களை எட்டும் நிலையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனை கண்டு கொள்ளாத மட்டக்களப்பு இரண்டு இராஜங்க அமைச்சர்களும் ஏனோ தானோ என்ற நிலையில் உள்ளனதை அவதானிக்க முடிகிறது.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது எறிகணை, விமானக்குண்டுகள், நச்சுக்குண்டுகள் போட்டு இனப்படுகொலை 2009இல் செய்யப்பட்டது போன்று தற்போது தமிழர்களின் பொருளாதாரத்தை ஈட்டும் கால்நடைகளுக்கு (மாடுகள்) வாய்வெடி வைத்தும் மின்சார கம்பிகளை கட்டியும் வாய்பேசா சீவன்களை வதைக்கும் மிக மோசமான செயல் அரங்கேறிக்கொண்டுள்ளது.
பாற்பண்ணையாளர்கள்
புத்த சமயத்தை பின்பற்றுபவர்களே அவரின் போதனைகளை குழிதோண்டி புதைக்கிறார்கள். வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்யும் நய வஞ்சக செயலை இலங்கை அரசில் உள்ள எவருமே தட்டிக்கேட்க முடியாதவர்களாக உள்ளனர். அவர்களும் இதற்கு உடந்தையாகவே உள்ளனர் என்பது வெளிப்படை.
மயிலத்தமடு, மாதவனையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த வருடம் 2023, செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, 2023,செப்டெம்பர் 15ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இந்த பண்ணையாள்ர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணம், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் உட்பட பலரும் ஆதரவு வழங்கி வருவதை காணலாம்.
நீதிமன்ற தீர்ப்பு
கடந்த 2023, அக்டோபர் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149ஆவது ஆண்டு விழாவையொட்டி 10.00 மணிக்கு வருகை தந்தபோது மயிலத்தமடு பண்ணையாளர்கள் கொம்மாதுறை சித்திவினாயகர் ஆலயத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
அந்தப்போராட்டத்தில் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சித்தாண்டி பண்ணையாளர்கள் உட்பட 37, பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2023, நவம்பர்,17, ம் திகதி வழக்கு 2024, ஜனவரி, 24இல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நாளை 2024,மார்ச்ச், 04ஆம் திகதி மூன்றாவது தவணைக்காகதாக்கல் செய்யப்பட்டு நீண்டு செல்கிறது.
ஒரு ஜனநாயக ரீதியான கவன ஈர்ப்பு போராட்டம் கூட நடத்த முடியாத நிலையே தொடர்வதை இந்த வழக்கு உறுதி செய்துள்ளதை அறிய முடிகிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலம் மயிலத்தமடு பண்ணையாளர்களை அப்புறப்படுத்துமாறு கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அத்துமீறிய பெரும்பான்மையினரை வெளியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் ஏறக்குறைய ஒருவருடங்கள் கடந்தும் அவர்களை வெளியேற்றவும் இல்லை, அவர்கள் மேய்ச்சல் தரையை விட்டு வெளியேறவும் இல்லை என்பதே உண்மை.
ஆனால் கவன ஈர்ப்பு பண்ணையாளர்கள் மேற்கொண்டால், அல்லது பண்ணையாளர்களுக்கு ஆதரவாக மேற்கொண்டால் பொலிஸார் சட்டத்தால் அச்சுறுத்தும் நிலை உள்ளது.
அதிலும் போராட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தவிர்த்தே ஏறாவூர் பொலிசார் 37, பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நீதி அமைச்சர்
ரணிலின் 2024 செயலணி தலைவர் என தன்னை அறிமுகம் செய்யும் மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை மோகன் பெப்ரவரி 23ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார்.
அவர்களின் ஏற்பாட்டில் மயிலத்தமடு பண்ணையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவருடைய முகநூலில் விளம்பரப்படுத்தியிருந்தார்
ஆனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சித்தாண்டி பண்ணையாளர்களை அவர் சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பாற்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் கட்டாயம் பண்ணையாளர்களை சந்தித்திருந்தால் ஏதோ ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த கால்நடைப்பண்ணையாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர் என்பதே உண்மை.
ரணிலின் செயலணி தலைவர் கணகதிப்பிள்ளை மோகன் பண்ணையாளர்களை நீதி அமைச்சர் சந்திப்பதாக ஏற்கனவே விளம்பரப்படுத்தியதும் பின்னர் அவர் மட்டக்களப்புக்கு வருகை தந்தும் பண்ணையாளர்களை சந்திக்காமல் சென்றதும் மிகுந்த ஏமாற்றத்தை தந்ததாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கால்நடைப்பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானது அதற்கான நட்ட ஈடோ அந்த மாடுகளை கொலை செய்த குண்டர்களை கைது செய்யவோ இல்லை.
மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்ககூட முடியாத பஞ்சமா பாதகத்தை ரணில் அரசு செய்துள்ளது.
தரை அபகரிப்பு
சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாகவும் பாற்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
உண்மையில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பதற்கான திட்டம் சிங்கள மக்களை குடியேற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து தமிழர்களின் பிரதிநித்துவத்தை குறைத்து ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் நிலங்களை அபகரித்தது போன்று மட்டக்களப்பிலும் அபகரித்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்காலத்தில் மட்டக்களப்பில் இருந்து வரவைப்பதே பேரினவாதிகளின் சதித்திட்டம் என்பதே உண்மை.
தமக்கு சொந்தமான சுமார் 275, மாடுகளை அத்துமீறிய குடியேற்றவாசிகளான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளதாக பண்ணையாளர்கள் , தமது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் காலங்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மானாவாரி பெரும்பபோக நெற்செய்கை ஆரம்பித்து நெற்செய்கை அறுவடை முடியும் வரை ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு மாதங்கள் மாடுகளை கொண்டு சென்று மேயவிடும் இடம் இது.
இவர்கள் அத்துமீறி குடியேறியமையால் தமிழர்களின் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும் என தினமும் நிலைமை தொடர்கிறது.
இதேவேளை மயிலத்தமடு, மாதவனையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பாற்பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல்
இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த வருடம் 2024, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் அளவில் ஜனாதிபதி தேர்தல் அதனை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் என்பன இலங்கையில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் தேர்தலில் பெரிய தாக்கத்தை செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க தமிழ் அமைச்சர்கள் அரசுடன் ஆதரவாக செயல்படுகின்றனர் சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகிய இருவரும் கடந்த 2020, பொதுத்தேர்தலில் தாம் அபிவிருத்திக்காவும், கிழக்கை மீட்பதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
அந்த பிரசாரங்களை நம்பி மட்டக்களப்பு தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர் ஆனால் நான்கு வருடங்களாக இராஜாங்க அமைச்சர்களாக பதவியில் உள்ள இருவரும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையை மீட்டுத்தருவதற்கன எந்த ஆக்கபூர்வமான விடயத்தையும் இதுவரை செய்யவில்லை என்பதே உண்மை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Ariyam அவரால் எழுதப்பட்டு, 07 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.