நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட மே தினம்
திருகோணமலை
மூதூர் - மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தினம் இன்று வியாழக்கிழமை(01) காலை கொண்டாடப்பட்டது.
இதன்போது, தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர் - மல்லிகைத்தீவில் உள்ள உழவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மூதூர் - மல்லிகைத்தீவு கிராம மக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
செய்தி - கியாஸ் சாபி
யாழ்ப்பாணம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதியிலிருந்து a9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் பொது நூலகம் வரை சென்றடைந்து அங்கு கண்டன கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் 12 பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த மே தினம், தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளது.
இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் சிவில் சமூக மையம், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், போராளிகளின் நலன்புரிச் சங்கம், அகில இலங்கை, கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம், சமூக மாற்றத்திற்கான ஊடக மையம், நிமிர்வு ஊடக மையம், மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்துகொண்டன.
செய்தி - எரிமலை, தீபன்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடற்றொழிலாளர் கிராமங்களில் இன்றைய தினம்(01.05.2025) மே தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.
அதனடிப்படையில் மன்னார் வங்காலை கிராம மக்கள், இம் முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த கிராம மக்கள் இன்றைய தினம் மே தினத்தை ஒன்று திரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
செய்தி - ஆசிக்
இ.தொ.காவின் மே தினம்
இலங்கையிலுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பிரதான மேதினக் கூட்டத்தையோ அல்லது பேரணியையோ நடத்தவில்லை.
கொட்டகலையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அத்துடன், கொட்டகலை முத்து விநாயகர் கோவியில் பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். அத்துடன், மே தினத்தை முன்னிட்டு தோட்ட மற்றும் நகரவாரியாக சிறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் இ.தொ.கா பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். மே தினத்துக்காக செலவிடப்படும் பணம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்படும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - திருமால்
கிளிநொச்சியில் மேதின நிகழ்வு
டாபிந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, காக்காக்கடைச் சந்தியிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை நடைபவனி மற்றும் அமைதிப் பேரணி இடம்பெற்றதை தொடர்ந்து, மண்டப நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், பென்களுக்கு சம ஊதியம், சம உரிமை, தொழில் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி - தேவந்தன், எரிமலை
எதிர்க்கட்சியின் மே தின கூட்டம்
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம், தலவாக்கலை நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளது.
செய்தி - திவா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
