சிகிச்சைக்கு மறுத்ததால் உயிரிழந்த 2 மாத குழந்தை: விசாரணைகள் ஆரம்பம்
மாத்தறை - கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் 2 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி, மாத்தறை கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு மூச்சுத்திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
விசாரணைகள் ஆரம்பம்
மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 2 மாதம் 27 நாட்களை உடைய இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பெற்றோர் உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை கொட்வில பிரதேசத்தில் அமைந்துள்ள மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன்பின்னர் குழந்தையை அம்பியூலன்சில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.
இதனையடுத்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை இறந்துவிட்டதாகவும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |