வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகளுக்கு மாத்தளை விமான நிலையம்- அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மாத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வளங்களை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தளை விமான நிலையத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட விருப்பம் தெரிவிக்கும் கோரிக்கை நடைமுறையின் கீழ், இந்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, இவற்றில் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 9ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் முன்மொழிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
விமான மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த EOI நடைமுறையின் மூலம், மாத்தளை விமான நிலையத்தில் சாத்தியமான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

அமைச்சின் தகவலின்படி, கிடைக்கப்பெற்ற முதலீட்டு முன்மொழிவுகள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.
அனுபவம் கொண்ட முதலீட்டாளர்கள் தேவை
விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சிவில் விமான சேவைகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் இதில் அடங்கும். விமான நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகள் இதில் உள்ளடங்கும்.
இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான தகுதிகள், அனுபவம் மற்றும் திறன்களை முதலீட்டாளர்கள் நிரூபிக்க வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட திட்டக் குழு, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சாத்தியமான முதலீட்டாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள், அடுத்தக்கட்ட கொள்முதல் செயல்முறையான முன்மொழிவுகளுக்கான கோரிக்கை நடைமுறையில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
முழுமையான முன்மொழிவுகளைத் தயாரித்து சமர்ப்பிக்க முதலீட்டாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையில், EOI விண்ணப்ப காலக்கெடு ஜூலை 9ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.