மின்சாரக் கட்டணம் உயர்ந்தால் பாரிய போராட்டம் வெடிக்கும் - மொட்டுக் கட்சி பகிரங்க எச்சரிக்கை
அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது. அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்த
இதன்போது மேலும் தெரிவிக்கையில், "உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவாகக் காணப்படும் நிலையிலும், இலங்கைக்கு எரிபொருள் வந்தடைவதற்கு முன்னரே உள்நாட்டில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
போர்ச் சூழலைக் காரணம் காட்டி 20 நாள்கள் வரை விலை மனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 80 ரூபா மேலதிகமாகச் செலுத்தி அரசு எரிபொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பாரிய இலாபம் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் காரணமாக 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால், இலங்கையிலுள்ள சுமார் 60 இலட்சம் வீடுகளிலும் தலா 3 மின்விளக்குகள் வீதம் மொத்தம் 1.8 கோடி மின்விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைத்து வைக்க வேண்டும்.
இவ்வாறான ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்தாமல், ஊழலில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அந்தப் பணத்தை அரசு அறவிட வேண்டும்.
அரசின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மைக்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.