சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்: எம்.பி.எம். முபாறக்
நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தெரிவித்துள்ளார்.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் வினைத்திறனுள்ள வகையில் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சுற்றுச்சூழலை இயற்கை மாறாது பாதுகாக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வினைத்திறனுள்ள வகையில் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சுற்றுச்சூழலை இயற்கை மாறாது பாதுகாத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகள் மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் பிரதான பேருந்து தரிப்பிடம் அமைந்துள்ள கொல்லன் ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(16.06.224) இடம்பெற்றன.
சூழல் பாதிப்பு
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மூதூர் பிரதேச செயலாளர் முபாறக்,
“திண்மக் கழிவுகளை கண்ட இடங்களில் போட்டு செல்வதனால் மிக மோசமான சூழல் பாதிப்புக்களை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன. மேலும், கண்டபடி கொட்டப்படும் திண்மக் கழிவுகள் இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் தடை செய்கின்றன. இவ்வாறு தடை ஏற்படுவதனால் மழை காலங்களில் எதிர்பாராத வகையில் எதிர்பாராத இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகின்றன.
இதனால் நாமே துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்படுகிறது. எனவே, இந்த விடயத்தில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும்.
சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” என்றார்.