சிறுபோக அறுவடையின் போது மட்டக்களப்பில் ஏற்படவுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாடு: கே.கருணாகரன் கவலை(Photo)
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறுபோக அறுவடை
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்தில் சிறுபோக அறுவடை ஆரம்பமாகவுள்ளது. இந்த அறுவடை எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதியளவில் முடிவடையவுள்ளது.
இம்முறை 32720 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள
நிலையில் அறுவடை செய்யப்படவுள்ளது. இந்த அறுவடைக்காக பாரியளவு எரிபொருள்
தேவைப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் விவசாய நடவடிக்கைகளுக்கு 12070256 லீற்றர் டீசல் தேவைப்படுகின்றது. இதேநேரம் வாராந்தம் மீன்பிடியாளர்களின் தேவையினை நிவர்த்திசெய்வதற்காக 1502200 லீற்றர் மண்ணெண்ணையும் 661000 லீற்றர் டீசலும் தேவைப்படுகின்றது.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு டீசலின் அளவும் மண்ணெண்ணையின் அளவும் மிகவும் குறைந்தளவிலேயே கிடைக்கின்றது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சுகாதார துறையினர், நீர்வழங்கல் துறையினர், கல்வித்துறையினர் போன்ற பல்வேறு துறையினர்.
இந்த எரிபொருள் நெருக்கடிகளினால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
இது தொடர்பில் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள்,சுகாதார துறையினர், பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்களை அழைத்து கூட்டம் ஒன்றினை நடாத்தினோம்.
இதன்போது அத்தியாவசிய சேவைகளை வழங்கும்போது ஒரு குடும்பத்திற்கான குடும்ப அட்டையினை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த அட்டையினை ஒவ்வொரு குடும்பமும் வைத்திருப்பதன் மூலம் இந்த அட்டையினை காட்டி அவசிய தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.” என கூறியுள்ளார்.