ராவணா எல்ல பகுதியில் பாரிய தீ விபத்து: 100 ஏக்கருக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசம்
எல்ல பிரதேச செயலக பிரிவில் உள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று பிற்பகல் முதல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு முழுவதும் குறித்த பகுதியில் தீ வேகமாக பரவியதாகவும், இதன் விளைவாக 100 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரிய அளவிலான சரிவுகள் மற்றும் பாறைகளைக் கொண்ட இந்த பகுதியில் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறுகிறது.
தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவம், பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள், வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் இந்த தீ இன்னும் வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அத்ஃதல த சில்வா குறிப்பிட்டுள்ளார்.