மீண்டும் தாக்கினால் பேரழிவைச் சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு ஈரானின் அதிரடி எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கும் ‘பாரிய சேதம்’ ஏற்படும் என ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று(18) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய சேதம்
“அவர்கள் எம்மைத் தாக்கத் துணியமாட்டார்கள் என மக்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். அவ்வாறு தாக்கினால், அவர்களுக்கும் இப்பிராந்தியத்திற்கும் பாரிய சேதம் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அசீஸ் நசீர்சாதே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச தொலைக்காட்சியின்படி, நாடாளுமன்றத்தில் வாக்களித்த 277 உறுப்பினர்களில் 237 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இராணுவப் பதவி நிலை இல்லாத போதிலும், அக்லாகி பாதுகாப்பு அமைச்சில் 42 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

மேலும், 2013ஆம் ஆண்டு முதல் ஈரானின் பாதுகாப்புத் தொழில்துறை அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அணுவாயுதம் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு 2007ஆம் ஆண்டு தடைகளை விதித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.