ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோருவது அரசியல் முயற்சி! ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு
ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் முயற்சியாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரர்
ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
பொதுமன்னிப்பு
ஞானசார தேரருக்கு உடனடியாகப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர்,
நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கும், முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஒருவருக்கும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், நாட்டில் இனவாதம் தொடர்ந்தும் தலைதூக்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்தார்.

எனவே, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தாம் கௌரவமாக ஏற்றுக்கொள்வதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தக்கூடாது என்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.