வடக்கு - கிழக்கில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுப்பு (Photos)
வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்
யாழ்.வல்வெட்டித்துறை பேருந்து நிலையம் முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோரியே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், எரிவாயு விலையேற்றம், மற்றும் தட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், மின்சாரத் தடையை நீக்கக் கோரியுமே பாதாதைகள் ஏந்தி கோசம் எழுப்பியதுடன், வீதியில் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட அகில இலங்கை அரசாங்க சிற்றூழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி - கோகுலன்
மட்டக்களப்பு
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை இன்று காலை மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்தனர்.
அரச, தனியார் வங்கிகள் இணைந்த தொழிற்சங்கங்கள், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம், இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம், இலங்கை ரெலிகொம் கூட்டுத்தாபனம், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தொழிற்சங்கங்களும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இந்த போராட்டங்களை முன்னெடுத்தது.
இதன்போது தொழிற்சங்கங்களின் பேரணி மற்றும் கட்சிகளின் பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாகி திருமலை வீதியூடாக தாண்டவன்வெளி சந்திவரை சென்று மீண்டும் காந்திபூங்கா வரையில் பேரணியாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தும் பதாகைகள் ஏந்திவந்ததுடன், அது தொடர்பான கோசங்களையும் எழுப்பினார்கள்.
அத்துடன் பொருட்களின் விலைகளை குறைத்திடு,அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை உடன் நிறுத்து, மருந்து பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரத்தினை தடையின்றி பெற்றுக்கொடு’, அரச வங்கிகளுக்கு வழங்கப்படும் அழுத்தங்களை உடன் நிறுத்து போன்ற பல்வேறு வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
செய்தி - குமார்
வவுனியா
வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா காமினி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியானது அங்கிருந்து மன்னார் வீதி வழியாகக் கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பசார் வீதிக்குச் சென்று அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுர சந்தி ஊடாக சென்று கண்டி வீதியில் முடிவடைந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'கோட்டா - மகிந்த அரசே பதவி, எரிபொருள் விலையைக் குறை, பொருட்களின் விலையை ஏற்றாதே, அரசாங்கமே வீட்டுக்கு போ' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரிய சங்கத்தினர், அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சேவையாளர் சங்கம், வெகுஜன அமைப்புக்கள், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், மின்சார சபை ஊழியர் சங்கம், நீர்ப்பாசன திணைக்கள ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்து கொண்டன.
சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக மன்னார் வீதி மற்றும் கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் சில மணிநேரம் ஏற்பட்டிருந்தது.
செய்தி - திலீபன்
திருகோணமலை
அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளமையால் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்பதைக் கண்டித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக நீதிமன்ற வீதியினூடாக தபால் அலுவலகம் வழியாக மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்தது.
கோட்டா நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு, அமெரிக்காவுக்கு நீ ஓடு, மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய், இட்டுகம நிதியின் மிகுதி 1.5 மில்லியன் எங்கே போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.



