தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும்: ஐ.நாவின் முன்னாள் இராஜதந்திரி
ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற் திட்டத்தைக் குறிப்பிட வேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் ராஜதந்திரியுமான மார்க் மலோச் -பிரவுன் (Mark Malloch-Brown) வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “தேர்தலை நடத்த வேண்டாமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். தேர்தலை நடத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிட முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல் பதிவிட்டிருந்தார்.
சர்வதேச நாணய நிதியம்
அதில், “தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்க முடியாமல் இருப்பதற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார். தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறை சேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவு குறித்து மார்க் மலோச்-பிரவுன் தனது டுவிட்டரில் கூறியதாவது,
ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாகச் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது. தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்தில் உள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
