அதிவேகமாக பயணித்த அரசியல்வாதியின் மகனின் வாகனம் விபத்து : கமராவில் பதிவாகிய காட்சிகள்
பம்பலப்பிட்டி மரின் வீதியில் தனியார் பல்கலைக்கழக 18 வயது மாணவன் கடுமையான வேகத்துடன் சொகுசு எஸ்யூவி ஜீப்பினை செலுத்தி, இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மாணவன் மயிரிழையில் தப்பியுள்ளார், இச்சம்பவம் 5 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது என முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஜீப்பை ஓட்டி வந்த மாணவன் அதிர்ச்சி அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி கடற்கரை வீதியில் பயணித்த சொகுசு ஜீப் கட்டுப்பாட்டை இழந்ததால் வலது பக்கம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் மோதி தூக்கி எறிந்து பின்னர் மின்கம்பத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது சொகுசு ஜீப்பில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில் மூன்று வாகனங்களும் மின்கம்பமும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் விபத்து பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.