பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகள்! - வெளியானது ஒளிபடம்
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், இதன்படி தற்போது வேகமாக எரிபொருள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மேம்பட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தார். ஆனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையின் தீவிரம் குறித்து புதிய ஒளிபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, லண்டன், தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆகியவை தற்போது 20 வீதத்திற்கும் குறைவான எரிபொருள் அளவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருக்கடியைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து ஒளி அமைப்பின் கீழ் இந்தப் பகுதிகள் 'சிவப்பு நிறத்தில்' அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், வடகிழக்கு, யார்க்ஷயர் மற்றும் வேல்ஸில் விநியோகம் சிறப்பாக இருப்பதனால் அவை சிவப்பு நிறத்தில் இருந்து செம்மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, ஸ்காட்லாந்து செம்மஞ்சள் நிறத்தில் இருந்து பசுமை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வடக்கு அயர்லாந்து ஏற்கனவே பசுமை நிறத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில், கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் லாறி ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video.....