அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்! சுகாதார தரப்பின் அறிவிப்பு வெளியானது
இலங்கையில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ளது, இந்த நிலையில் புதிய வைரஸ் பரவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மோசமான தாக்கங்களுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவல் ம்றறும் புதிய தரவுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டெல்டா வைரஸ் பரவலுடன் ஒமிக்ரோன் வைரஸும் பரவ ஆரம்பித்தால் நாட்டில் மிக மோசமான நிலையொன்று ஏற்படும். எனவே வைரஸ் தொற்றில் இருந்து விடுபட சகலரும் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நோய் அறிகுறியுடன் அதிகளவான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்.
ஒமிக்ரோன் வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளில் பரவிக்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகள் மீண்டும் முடக்க நிலையை அறிவித்துள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனமும் ஒமிக்ரோன் வைரஸ் குறித்த அச்சுறுத்தல் சமிக்ஞையையே கொடுத்துள்ளனர்.
இலங்கையிலும் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது சாதாரண விடயமல்ல.
ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் இருப்பதையே இது வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ளது, இந்த நிலையில் புதிய வைரஸ் பரவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மோசமான தாக்கங்களுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும். இரண்டு வைரஸ் தொற்றுகளும் ஒன்றிணைந்தால் கோவிட்- 19 வைரஸ் சுனாமி ஒன்று உருவாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே பூஸ்டர் தடுப்பூசிகளை விரைவாக சகலரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே சுகாதார தரப்பாக எமது ஆலோசனையாகும்.
முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளை விரைவாக ஏற்றிக்கொண்டதன் காரணத்தினால் தான் எம்மால் இப்போது சற்று பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொள்ள முடிந்துள்ளது. இல்லையேல் தொடர்ந்தும் நாடு முடக்கத்தில் இருந்திருக்கும்.
ஆனால் இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதற்காக இனிமேல் தடுப்பூசிகள் அவசியம் இல்லை என அர்த்தப்படாது. ஏனென்றால் இந்த தடுப்பூசிகள் அனைத்துமே தற்காலிக பாதுகாப்பாக அமைந்துள்ளதே தவிர நிரந்தர தீர்வு அல்ல.
எனவே மக்கள் இப்போது பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாது தடுப்பூசியில் இருந்து தவிர்த்துக்கொள்ளும் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இது சமூகத்திற்கு பாதிப்பாகும். எனவே 30 வயதிற்கு மேற்பட்ட சகலரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது ஆரோக்கியமானது.
இல்லையேல் நோய் அறிகுறியுடன் அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



