பிரித்தானியாவில் மேலும் பல விமானங்கள் ரத்து - பயணிகள் பெரும் அவதி
பிரித்தானியாவில் அதிகளவான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னணி விடுமுறை நிறுவனமான Tui அதிகமான விமானங்களை இரத்து செய்து வருகின்றது.Tui ஜூன் இறுதி வரை நாள் ஒன்றுக்கு ஆறு விமானங்களை ரத்து செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 34,000 பயணிகள் பாதிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பறக்கத் தயாராக இருப்பதால், பிற விமான நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tui மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்
இரண்டு நாட்களுக்கும் குறைவான அறிவிப்புடன் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஒரு குடும்பம் மற்றும் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜோனா சந்திரமணி, தானும், தனது கணவர் மற்றும் அவர்களது ஏழு வயது இரட்டைப் குழந்தைகளும் புதன்கிழமை துருக்கிக்குச் செல்லத் தயாராகிவிட்டதாகவும், ஆனால் திங்கள்கிழமை மாலை அவர்களது விமானம் ரத்து செய்யப்பட்டதாகத் தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது என்றும் கூறினார்.
Tui இப்போது அவர்களுக்கு வவுச்சர்களை வழங்கியுள்ளது, எனினும், குடும்பத்தினர் அவர்களுடன் மீண்டும் முன்பதிவு செய்ய விரும்பவில்லை, அதற்கு பதிலாக Jet2 உடன் மல்லோர்காவிற்கு பறக்கிறோம் என்று அவர் கூறினார்.
"Tui மீது நாங்கள் முழு நம்பிக்கையையும் இழந்துவிட்டோம்," என்று ஜோனா சந்திரமணி மேலும் கூறினார்.
வாடிக்கையாளர்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார்கள்
ரத்து செய்வதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் விடுமுறை நாட்களுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார்கள் என்று Tui நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்துசெய்யப்பட்டவை அதன் விமானங்களில் 4 விகிதம் என்று நிறுவனம் கூறியது.
விமானம் ரத்துசெய்தல் "ஏமாற்றம்" என்று புரிந்துகொண்டதாக Tuiதெரிவித்துள்ளது. மான்செஸ்டர் விமான நிலையத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க இந்த நடவடிக்கை அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் குறித்த நிறுவனம் கூறியுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் விமானங்கள் ரத்து, விமான நிலையங்களில் சோதனை மற்றும் பொருட்களை சேகரிக்கும் போது தாமதத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு முன், பிரித்தானியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களில் சுமார் 140,000 பேர் பணியாற்றினர் என்று ஏர்லைன்ஸ் யுகே தெரிவித்துள்ளது.
எனினும், அதன் பின்னர் விதிக்கப்பட்ட சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.