சடலங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு! பிரித்தானிய முஸ்லிம் பேரவை
கொவிட் தொற்றினால் மரணிக்கும் நபர்களின் சடலங்களைப் பலவந்தமான அடிப்படையில் இலங்கையில் தகனம் செய்யப்படுவதற்கு பல நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக பிரித்தானிய முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்கா, பொஸ்ட்வானா, மாலாவி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் சடலங்கள் தகனம் செய்யப்படுவதனை எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் காரணிகளுக்காக ஒட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் தண்டிக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய முஸ்லிம் பேரவையின் செயலாளர் நயாகம் இக்பால் சாக்ராய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலைமை பாரதூரமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பலவந்தமான அடிப்படையில் சடலங்கள் தகனம் செய்யப்படும் விவகாரம் குறித்து இருபது நாடுகளுடன் பேசப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளின் தலைவர்கள், வெளி விவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களும் பலவந்தமான அடிப்படையில் சடலங்கள் தகனம் செய்யப்படுவதனை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சடலங்கள் தகனம் செய்யப்படுவது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது எனவும், நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பலவந்தமான அடிப்படையில் சடலங்கள் தகனம் செய்யப்படுவது நிறுத்தப்படாவிட்டால் வேறு நாடுகளிலும் அரசியல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு காரணிகளின் அடிப்படையில் இந்த நடைமுறை பின்பற்றப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.