இறுதி யுத்தத்தின் போது நடந்த கசப்பான உண்மையை வெளிப்படுத்தும் மனோ கணேசன்
உண்மையில் 2009 இறுதி யுத்தத்தின் போது, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் உள்ளக செயற்பாட்டை கொண்ட ஐ.நா. அலுவலகம், வன்னியில் இருந்து பொறுப்பற்ற முறையில் வெளியேறி தனது கடமையில் இருந்து தவறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஒரு உள்ளக ஆய்வு அறிக்கை அவ்வேளையில் ஐ.நாவுக்குள் தயாரிக்கப்பட்டு உரையாடலுக்கு உள்ளானது, இந்த கசப்பான உண்மை எமக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர் 2022 மார்ச் 49ஆம் கூட்டத்தில் எழுத்து மூல அறிக்கையை வெளியிடுவார். அதன்பின் 2022 ஜூன் 50ஆம் கூட்டம் கடந்து போகும்.
அதையடுத்து, 2022 செப்டெம்பரில் கூடும் 51ஆம் கூட்டத்தில், இலங்கை அரசின் அதுவரையிலான “மனித உரிமை நடத்தை” தொடர்பில், ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுகளை, ஐ.நா மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் வெளியிடுவார்.
இந்த இரண்டு வருட கூட்டங்களும் முக்கியமானவை. இம்முறை வாய்மொழி அறிக்கையில், “இலங்கை தொடர்ந்து ஐநாவின் கண்காணிப்பு வலயத்தில் இருக்கும் எனவும், இலங்கைக்கு எதிராக இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மேலும் சேகரிக்க, இவ்வாண்டு மார்ச்சில் எடுக்கப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி தான் கட்டுப்பட்டிருப்பதாகவும்” ஆணையர் மிச்செல் பச்லெட் கூறியுள்ளமையை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கின்றது.
எதிர்வரும் ஆண்டில் இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமை மீறல்களையும், ஐ.நா. மனித உரிமையக அவதானத்துக்கு முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம்.
உண்மையில் 2009 இறுதி யுத்தத்தின் போது, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் உள்ளக செயற்பாட்டை கொண்ட ஐ.நா. அலுவலகம், வன்னியில் இருந்து பொறுப்பற்ற முறையில் வெளியேறி தனது கடமையில் இருந்து தவறியது.
இதுபற்றி ஒரு உள்ளக ஆய்வு அறிக்கை அவ்வேளையில் ஐ.நாவுக்குள் தயாரிக்கப்பட்டு உரையாடலுக்கு உள்ளானது. இந்த கசப்பான உண்மை எமக்கு தெரியும். எனவே இலங்கை வாழ் தமிழ் மக்கள் பற்றி ஐ.நா. சபைக்கு, ஒரு கடப்பாடு இருக்கிறது.
ஆகவே அது இன்று வரை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்கிறது. அதை நாம் மனதில் கொண்டு இவ்விவகாரத்தை முன் நகர்த்த வேண்டும். இம்முறை, தமிழ் கட்சிகள் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு, வெவ்வேறாக கடிதங்கள் எழுதியமை பற்றி மென்மேலும் பேசி முரண்பட கூடாது.
உண்மையில் இப்படி பல கடிதங்கள் சென்றமை நல்லதே என அவற்றை நாம் சாதகமாக பார்க்க வேண்டும். அடுத்த வருட அவைகளின் போது தமிழ் கட்சிகள் ஒருமுகமாக ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தை அணுகலாம்.
அதற்கான முன் தயாரிப்பு பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். மனித உரிமை கூட்டங்களின் போது மாத்திரம் திடீரென எழாமல், எவ்வேளையிலும் விழிப்புடன் செயற்பட வேண்டும். எதிர்வரும் ஆண்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து பயணிக்கலாம் என நான் நம்புகிறேன்.
இறுதிப்போரில் சொல்லொணா துன்பங்களை சந்தித்த வடக்கு, கிழக்கு தமிழ் உடன்பிறப்புகளை பற்றியே ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆரம்பத்தில் பெரிதும் பேசியது.
இப்போது இலங்கையில் ஒட்டுமொத்த சிவில் சமூக செயற்பாடுகள், இராணுவ மயமாக்கல், மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் மீதான ஒடுக்கு முறை, கத்தோலிக்க மக்களை குறிவைத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகியவை பற்றியும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் பேசுகிறார்.
இப்பின்னணியில், அரச கொள்கைகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள, மலையக தமிழர்கள் மீதான அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமை மீறல்களையும், ஐநா மனித உரிமையக அவதானத்துக்கு முன்வைக்க உத்தேசித்து நடவடிகைகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.