மன்னார் துப்பாக்கிச்சூடு: குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள சந்தேகநபர்கள்
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் என மூன்று சந்தேகநபர்களும், குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிவான் முன்னிலையில் வழங்க முன்வந்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தேகநபர்கள் மூவரையும் இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாகவுள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தார்.
2022ஆம் ஆண்டு உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்படப் பலர் படுகாயமடைந்தனர்.
இருவர் உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு முன்னிலையாக வருகை தந்தபோதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பித்தனர்.
சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் பேசாலையில் வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர் உட்பட இருவர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அடம்பனில் வைத்து இருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழிதீர்க்கும் சம்பவங்கள்
குறித்த கொலையும் நீதிமன்றுக்கு முன்பான கொலையும் சகோதரர்களின் கொலைக்குப் பழிதீர்க்கும் சம்பவங்கள் என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் மூவரும் நீதிவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் மாலை முற்படுத்தப்பட்டனர்.
பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் இதன்போது விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஆராய்ந்த நீதிவான், நேற்று வரை மூவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கட்டளை வழங்கியிருந்தார்.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், சந்தேகநபர்கள் மூவரும் நீதிவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்க மன்றிடம் வேண்டுதல் வைத்ததாக தெரிவிக்கப்படகிறது.
இதன் காரணமாக பொலிஸ் தடுப்புக் கட்டளையை நீடிக்காது, சந்தேகநபர்கள் மூவரையும் இன்று வரை விளக்கமறியலில் முன்வைக்க உத்தரவிட்ட நீதிவான், இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவதற்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |