மன்னார் கிராம மக்கள் குடிநீர் இணைப்பு வழங்க கோரி மனு கையளிப்பு
மன்னார்- புதுக்கமம் கிராம மக்கள் தமது கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு மற்றும் நீர் விநியோகத்தை வழங்க கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
மன்னார் உயிலங்குளம் புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் (19.10.2026) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் யை சந்தித்து தமது கிராமத்தின் அவல நிலையை அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அத்தோடு, தமது கிராமத்திற்கு உடனடியாக குடி நீரை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கை
மேலும் குறிப்பாக புதுக்கமம் கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வரை வசித்து வருகின்ற நிலையில்,நாளாந்தம் குடி நீரை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக சுத்தமான குடி நீரை பெற்றுக் கொள்வதில் இக்கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பாரிய பிரச்சினைகளுக்கும் அக்கிராம மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக இரு தடவைகள் மன்னார் பிரதேச செயலகத்திற்கு கடிதங்களை கை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பிரதான குழாய் நீர் உள்ள இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் தமது கிராமம் உள்ளதாகவும், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமது கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு மற்றும் குடி நீரை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதிநிதிகள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.