மடுக்கரை கிராமத்தில் விவசாய செய்கைக்கு தடை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சாள்ஸ் எம்.பியிடம் முறைப்பாடு
மன்னார் - நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியில் வீடு கட்டிடங்கள் தவிர்ந்த பயன் படுத்தப்படாமல் இருக்கும் கால் ஏக்கர் அல்லது அரை ஏக்கர் காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடுக்கரை கிராமத்திற்கு இன்று (13) காலை திடீர் விஜயம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் குறித்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக விவசாயிகள் மேலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில்,
நாங்கள் பாரிய அளவில் விவசாயம் செய்யவில்லை. எங்களிடம் உள்ள அரை ஏக்கர் மற்றும் கால் ஏக்கர் காணியில் எங்களுடைய உணவு தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளத் தீர்மானித்தோம். இந்த பயிர்களுக்கான தண்ணீர் கூட எமக்குக் கிடைப்பதில்லை.
மழை மற்றும் ஆற்றில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்கின்றோம். இந்த நிலையில் மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்களம் இதற்குத் தடை விதித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் அதிக விலை கொடுத்து அரிசி வேண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
எனவே எமது வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் சிறிய அளவில் விவசாயம் செய்வதற்கு அனுமதியைப் பெற்றுத் தருமாறு மடுக்கரை கிராமத்தின் சிறு விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த
விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளைப்
பெற்றுத்தருவதாகத் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


